திருச்சி, மே 12: மே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர், திருச்சியை அடுத்த குமாரமங்கலம் பைபாஸ் ரோடு அருகே அவருக்கு சொந்தமான 1,850 சதுர அடி இடத்தில் ரஜினிகாந்தின் பெற்றோர் ராமோஜிராவ்-ராம்பாய் ஆகியோருக்கு ரூ.35 லட்சம் செலவில் மணிமண்டம் கட்டினார்.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ரஜினி காந்தின் அண்ணன் சத்திய நாராணராவ் நேரடியாக வந்து, பெற்றோரின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். மணி மண்டபத்திற்கு நேற்று மண்டலாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு பூஜைகள் செய்தார். இதில் சன்னியாசிகள், சாதுக்களும் கலந்து கொண்டனர்.

அங்கு பத்திரிக்கையாளர்களிடம் சத்யநாராயண ராவ் கூறியதாவது:- எங்களது பெற்றோருக்கு ரஜினி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டியுள்ளது மகிழ்ச்சி. அதற்கு 48 நாட்கள் மண்டல பூஜை இன்று அபிஷேகம் நடத்தி செய்கிறார்கள். இங்கு நடைபெறும் இந்த மண்டல பூஜை விழாவில் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நலமாக இருக்கவும் மழை பெய்து சுபிட்சம் ஏற்படவும் பூஜைகள் செய்யப்பட்டன.

தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பை எப்போது அறிவிப்பார் என்று நான் ஏற்கனவே கூறிவிட்டேன். மே 23-ந்தேதிக்கு பிறகு அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார். ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவர் தாமதம் செய்வதாக சிலர் கூறுகிறார்கள்.

தாமதம் செய்வது நல்லதுக்காகதான். அவர் தமிழக மக்களுக்கு நிறைய திட்டங்கள் வைத்திருக்கிறார். மணிமண்டபத்தை பார்க்க ரஜினி விரைவில் வருவார்.  இவ்வாறு அவர் கூறினார்.