‘அந்த நிமிடம்’ படம் மூலம் தமிழுக்கு வந்த சிங்கள இயக்குனர்

சினிமா

எல்.டபிள்யூ பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘அந்த நிமிடம்’. இந்தப் படத்தில் சில தமிழ், மலையாளப் படங்களில் கதாநாயகனாக நடித்த ருத்ரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நொஷின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சிங்கள மொழிப் படங்களில் கதாநாயகனாக நடித்த லால் வீரசிங் வில்லனாக நடித்து தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். பல சிங்கள மொழிப்படங்களில் நடித்தும், இயக்கியவருமான சன்ன பெராரா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்று நடித்திருக்கிறார்.

ஒருவர் ஒரு நிமிடத்தில் சிந்திக்காமல் செய்கின்ற தவறு அவர் குடும்பத்தை மட்டுமில்லாமல், மற்ற குடும்பத்தினரையும் எப்படி சீரழித்து சின்னா பின்னாமாக்குகிறது என்ற கருத்தை வலியுறுத்தும் படமாக அந்த நிமிடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் போன்ற பிரபலமான முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஆர்.குழந்தை ஏசு இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிங்களப் படங்களை இயக்கியவர். முதல்முறையாக தமிழ் படத்தை இயக்குகிறார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கான அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணாக் கோட்டை போன்ற பல பகுதிகளிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

படத்திற்கு தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை சஜித் ஆண்டர்சன் மேற்கொள்ள,எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்துள்ளார்.