2020-க்குள் சென்னை ஏர்போர்ட் புதிய கட்டிடம்

சென்னை

சென்னை, மே 12: சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைப்பு கட்டிடம் 2021-ம் ஆண்டுக்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட உள்ளது. இதன் மூலம்  சென்னை விமான நிலையத்தின் வழியாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு முனையத்துக்கும், உள்நாட்டு முனையத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலைய கட்டிடம் 2021-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்னதாகவே 2020-ம் ஆண்டு கடைசி வாக்கில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படு கிறது. இது குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் குருபிரசாத் மகாபத்ரா  சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இதில் கட்டுமானப் பணியை விரைவுப்படுத்தி முன்னதாகவே அதனை முடிக்க தீர்மானிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய கட்டிடம் 3.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட உள்ளது. அதில் தரைக்கு கீழே  சுரங்கப்பாதை அமைக்கப்படும். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் முதல் ஓடுபாதைக்கும், 2-வது ஓடு பாதைக்கும் இடையே கட்டப்பட உள்ள துணை முனையத்துக்கு இந்த வழியாக செல்ல முடியும்.

ஒருங்கிணைப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும். தற்போது சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 3 கோடி பேர் பயணம் சென்று வருகின்றனர். இதன் மூலம் மேலும் 50 லட்சம் பயணிகளை கூடுதலாக கையாள முடியும்.