அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை

இந்தியா

புதுடெல்லி, மே 12: அட்டார்னி ஜெனரலுக்கும் மத்திய அரசுக்குமிடையே கருத்து வேறுபாடு இல்லையென்று மத்திய  நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்கும் முன்பு கடந்த மாதம் 22-ம் தேதி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதனிடையே, தலைமை நீதிபதி விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டதில், மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இதுகுறித்து தனது இணையப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகப் பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை. அதில் உள்நோக்கம் உள்ளது.

பார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில், சில விவகாரங்களில் அவருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவரது கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே தமது கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்தக் கடிதத்தை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு அமைக்கப்படும் முன்பு நான் எழுதியிருந்தேன்.

பின்னர் எனது நிலைப்பாட்டை விளக்கி நான் எழுதிய இரண்டாவது கடிதத்தில், நீதித்துறையில் 65 ஆண்டுகால அனுபவம் உள்ளவர் என்ற முறையில் முதல் கடிதத்தை எழுதியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.