பிரயாக்ராஜ், மே.12: உத்தரபிரதேசத்தில், ஒரே வீட்டில், 82 பேர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இவர்களில், 66 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.  அலகாபாத் மாவட்டம், பக்ரைசியா கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் நரேஷ் புர்டியா, 98. விவசாயியான இவரது வீட்டில், மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் என, 82 பேர், ஒற்றுமையாக வசிக்கின்றனர்.

இவர்களில், 66 பேர், ஓட்டளிப்பதற்கான குறைந்தபட்ச வயதான, 18ஐ கடந்தவர்கள்.குடும்ப உறுப்பினர்களுக்கு, விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. சிலர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

தன் குடும்பம் பற்றி, ராம் நரேஷ் கூறியதாவது:- எங்கள் வீட்டில், யாருக்கும் தனியாக போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வீட்டில் ஒரே ஒரு சமையல் அறை தான் உள்ளது. தினமும், 20 கிலோ காய்கறிகள், 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி சமைக்கிறோம்.

சமையல் வேலைகளை, வீட்டில் உள்ள பெண்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர்.  எங்கள் குடும்பத்தை முன்னு தாரணமாக காட்டி, நம் நாடும், இப்படி தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதில், நான் பெருமையடைகிறேன்.

எங்கள் வீட்டில், முதல் முறையாக, என் கொள்ளு பேரக்குழந்தைகள் எட்டு பேர், இம்முறை ஓட்டளிக்கின்றனர்.

நாங்கள் எப்போதும், ஒன்றாக தான் ஓட்டளிக்க செல்வோம். அதுவும், மதிய உணவுக்கு பின் தான்
செல்வோம். நாங்கள் ஓட்டளிக்க வரும்போது, தேர்தல் அதிகாரிகளே, எங்களை வரவேற்பர் என்றார்.