ஐதராபாத், மே 13:ஐபிஎல் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியில் மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 150 என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினார்கள்.

டுபிளிசஸ் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். க்ருணல் பாண்ட்யா வீசிய 4-வது ஓவரில், பவுண்டரி, சிக்ஸ், பவுண்டரி என பறக்கவிட்ட டுபிளிசஸ், அதே ஓவரின் கடைசி பந்தில், அவரை டி காக் ஸ்டெம்பிங் செய்து அவுட் ஆக்கினார்.

இதன்பிறகு களமிறங்கிய ரெய்னா ராகுல் சாஹர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 1 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 10.3 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழப்பிற்கு 73 என இருந்தது.

வாட்சன் நிலைத்துநின்று விளையாடினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்னிலும், ராயுடு ஒரு ரன் மற்றும் தோனி 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பிராவோ 15 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, வாட்சன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தபோது, மலிங்கா வீசிய பந்தில் தாக்கூர் அவுட்டானார். இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றிபெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாகவும், ஆன்ட்ரூ ரஸ்ஸல் தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.