கொழும்பு, மே 13:  இலங்கையில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை முடக்கி தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையக் குழு உத்தரவிட்டுள்ளது. பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் விதத்திலும், போலி செய்தியின் பதிவுகளையும் பதிவிட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை சற்று மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் சிலோபம் என்ற கடலோர பகுதியில் கலவரம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான பதிவால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதையடுத்து அப்பகுதியில் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவைகளை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.