சென்னை, மே 13:மயிலாப்பூரில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மரம் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26). இவர் தரமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷினியனாக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 28). இவர் அண்ணாசாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

மேலும் பாரதிராஜா (வயது 26), பாரிமுனையில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பாவாடை ராயன் (வயது 22). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர்கள் 4 பேரும் மயிலாப்பூர் ரெயில் நிலையம் அருகே நண்பரை பார்க்க சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் நொச்சி குப்பத்திற்கு திரும்பியதாக தெரிகிறது. நள்ளிரவில் மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த போது ஸ்பீடு பீரேக்கர் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி சாலை ஓரம் உள்ள மரத்தில் மோதி பின்னர் அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில் அந்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே விஷ்ணு மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர
விசாரணை நடத்தி வருகின்றனர்.