டாக்டர் ராமதாஸ், பா.ம.க.

நிறுவனர் சென்னையிலிருந்து வெளிவரும் மாலைச்சுடர் மாலை நாளிதழ் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. செய்திகளை உண்மையாகவும், நேர்மையாகவும் வழங்கிவரும் மாலைச்சுடர் இதழ் நூற்றாண்டைக் கடந்தும் சாதனை படைக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இதழியல் துறையில் சாதனை படைத்த 10 மனிதர்களை பட்டியலிட்டால் அதில் கட்டாயம் இடம் பெறும் மனிதர் டி.ஆர். இராமசாமி ஆவார்.  ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் அரசியல் கட்டுரைகளை துள்ளல் நடையிலும், எள்ளல் நடையிலும் எழுதக்கூடிய அசாத்திய திறமை பெற்ற இதழாளர் அவர். அவர் தொடங்கிய நியூஸ் டுடே, ஆங்கில மாலை நாளிதழ் பல்வேறு புதுமைகளைப் படைத்து வெற்றிகரமான நாளிதழ்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதை அனைத்து தரப்பினரும் அறிவர்.

டி.ஆர்.ஆர் என்று அழைக்கப்படும் டி.ஆர்.ராமசாமியைப் போலவே அவரது புதல்வர் டி.ஆர்.ஆர் ஜவகரும் சிறந்த இதழாளராக உருவெடுத்திருக்கிறார்.  தந்தையின் வழியில் தனயன் தொடங்கிய தமிழ் மாலை நாளிதழ் தான் மாலைச்சுடர் இதழாகும். நாளிதழ்களை, அதிலும் குறிப்பாக போட்டிகளையும், பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய மாலை நாளிதழ்களை நடத்துவது சாதாரணமான விஷயமல்ல.

ஆனால், மாலைச்சுடர் நாளிதழ் அனைத்து சவால்களையும் கடந்து வெற்றிகரமான மாலை நாளிதழாக செயல்பட்டு வருகிறது. மிகக்குறைந்த நேரத்தில் அனைத்து செய்திகளையும் விளக்கமாகவும், அறம் தவறாமலும், அழகியலுடனும் வழங்குவதில் மாலைச்சுடர் மாலை நாளிதழ் தனித்துவத்துடன் திகழ்கிறது.

செய்திகளை வழங்குவது மட்டும் ஒரு நாளிதழின் பணி அல்ல. சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய பிற செய்திகளையும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விஷயங்களையும் வழங்க வேண்டியதும் பொறுப்புள்ள ஊடகத்தின் பணியாகும். அந்தப் பணியையும் மாலைச்சுடர் சிறப்பாக செய்து வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மாலைச்சுடர் நாளிதழ் அனைத்து வகைகளிலும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகள்.