டி.டி.வி.தினகரன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர்

பாரம்பரியமிக்க தமிழ்ப் பத்திரிகை உலகில் வெள்ளி விழா காணும் மாலைச்சுடர் நாளிதழுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருக்கரங்களால் 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்ட மாலைச்சுடர் வெற்றிகரமாக இயங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

பத்திரிகை நடத்துவதே சவாலான பணி, அதிலும் மாலை நேரப் பத்திரிகை நடத்துவது கடினமானது. அப்படிப்பட்ட சூழலில் மாலைச்சுடர் நாளிதழைச் சிறப்பாக வெளிக்கொண்டு வரும் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் எம்.சுப்ரமணியம் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

பத்திரிகைத் தொழில் என்பது சமூக அக்கறையோடு செய்ய வேண்டிய பணி. அதனால் தான் ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகின்றன. நான்கில் ஒரு தூண் ஆட்டம் கண்டாலும், ஜனநாயகம் என்கிற கட்டடம் ஆட்டம் கண்டுவிடும். இதனை எப்போதும் மனதில் கொண்டு, மக்களின் நலனை முன்னிறுத்தி பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.

கால் நூற்றாண்டைக் கடந்திருக்கும் மாலைச்சுடர் நாளிதழும் அத்தகைய பாதையில் பயணித்து தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆரம்பித்து வைத்த மாலைச்சுடர், பத்திரிகை தர்மம் எனும் அறம் பிறழாமல் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட அம்மாவின் திருப்பெயரால் அமைந்திருக்கும் இயக்கம் வாழ்த்துகிறது.