தூத்துக்குடி, மே 14: இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சியினர் தூத்துக்குடியில் குவிந்து உள்ளனர். இந்த நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர் அதிக அளவில் தங்கியுள்ள கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிகாலை 4 மணி முதல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் முத்து மற்றும் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் விடுதிக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர வாகன தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த வாகன சோதனை அனைத்தும் வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது இந்த விடுதியில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஓய்வுக்காக தங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதுஇதற்கிடையே, ஒட்டப்பிடாரத்தில் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னையில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார்.