புதுடெல்லி, மே 15: எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
மே 19-ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையொட்டி, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து’ எனவும், ‘அவர்தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சே’ எனவும் பேசினார்.
இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கமல்ஹாசன் மீது பிஜேபி, இந்து அமைப்புகள் காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிஜேபி செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பால் சிங் பாகா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தீவிரவாதத்தை ஒரு மதத்துக்குள் வரையறுப்பது தவறு. இந்தியாவின் தேசத் தந்தையான காந்தியை கொன்றவரை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறினால், ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தியை அவர் எவ்வாறு அழைப்பார் என கேள்வி எழுப்பினார்.
நாட்டில் மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ள கமல்ஹாசன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலுக்கு பிரதமர் மோடி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
அதில், எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.
உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை’ என்றார்.
மேலும், எந்தவொரு தீவிரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என மோடி பதிலளித்துள்ளார்.