சென்னை, மே 15: சென்னை மாநகர பேருந்து கழகம் புதிதாக இயக்கும் சிவப்பு நிற பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஏராளமான புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. பளிச் என்ற சிவப்பு நிறத்தில் இயக்கப்படும் இந்த பேருந்துகளில் வசதியாக காலை நீட்டி உட்காருவதற்கும் இடவசதி உள்ளதால் பயணிகள் சுகமான பயணத்தை மேற்கொள்வதாக கூறுகின்றனர்.
நின்று செல்லும் பயணிகளுக்கும் போதிய இடவசதி இருப்பதால் பயணிகள் பழைய பேருந்துகளில் ஏறுவதற்கு பதிலாக பேருந்துகளை அதிகம் நாடுகிறார்கள். குறிப்பாக ரெயில் வசதியில்லாத திருவான்மியூருக்கு அப்பால் ஓஎம்ஆர் சாலையில் அதிக பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் டீலக்ஸ் சேவையாக இயக்கப்படுவதால் சாதாரண கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துகழகத்திற்கு அதிக வருமானம் கிட்டிவருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பேருந்துகளை வரவேற்கும் அதேசமயம், கட்டணம் மிகஅதிகமாக உள்ளது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். அதிக கட்டணம் காரணமாக ரெயில் செல்லும் பகுதிகளில் ரெயிலையே தேர்வு செய்கின்றனர். கட்டணத்தைமுறைப்படுத்தினால் பேருந்துகளை மேலும் அதிகபயணிகள் தங்கள் பயணத்திற்கு தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.