டி.கே. புரொடக்ஷன்ஸ் சார்பாக, வி. துரைராஜ் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘பைரி’. புறா பந்தயத்தை மையமாக வைத்து, இந்திய சினிமாவில் சில திரைப்படங்கள் வந்திருந்தாலும், புறா பந்தயத்தின் தீவிரத்தையும், அதில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலையும் குறித்தும் முழுமையாகப் பேசும் ஒரு திரைப்படமாக உருவாகி வருகிறது ‘பைரி’.

100 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கோவில் நகரில், நடந்த புறா பந்தயங்கள் பற்றிய பெரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், பலருக்கும் இது குறித்து தெரியாமலேயே இருந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாகர்கோவில் நகரில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, நடந்த பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உருவாகி வரும் திரைப்படமே பைரி.

நெடுஞ்சாலை நாய்கள் என்ற குறும் படத்திற்காக சீஸன் 5-ன் சிறந்த வசனகர்த்தா விருது பெற்ற ஜான் கிளாடி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இவர் சஞ்சீவ்,மற்றும் சில இயக்குநர்களிடமும் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.25-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் கதாநாயகனாக நடித்த சையத் மஜீத் , இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.கதாநாயகியாக, மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், நடிக்கிறார்கள்.

படத்திற்கு ஏ.வி. வசந்த் ஒளிப்பதிவு செய்ய, சதீஸ் குமார் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். அருண்ராஜ் இசையமைக்கிறார்.