மிஸ்டர்.லோக்கல் ஜாலியான படம்: சிவகார்த்திகேயன்

சினிமா

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர்.லோக்கல் ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் கோடை விருந்தாக வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது:-
இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷஷடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. இப்போது அது நிறைவேறி உள்ளது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார்.
இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன் என்றார்.