சென்னை, மே 15: லாட்டரி அதிபர் மார்ட்டினின் காசாளர் பழனிச்சாமி உடலில் உள்ள ரத்த காயங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் சென்ற ஏப்ரல் 30ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராக பணிபுரிந்து வரும் கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த மே 3ம் தேதி, காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள தண்ணீர் குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.  இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தனது தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால், இது கொலை எனவும் கூறி, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கார்த்திக்கேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிச்சாமியின் பிரேத பரிசோதனையில் உடலின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த அறிக்கையில் திருப்தி அடையாத நீதிபதிகள், பழனிச்சாமியின் உடலில் உள்ள காயங்கள் அவர் உயிரோடு இருக்கும் போதே ஏற்பட்டதா? அல்லது அவர் இறந்த பிறகு யாரேனும் காயங்கள் ஏற்படுத்தினார்களா? என சந்தேகம் எழுப்பினர். தற்போது பழனிச்சாமியின் உடல் பதப்படுத்தப்பட்டுள்ள நிலை குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், தண்ணீர் குட்டையில் மூழ்கி இருந்த பழனிச்சாமியின் வாயில் ரத்த காயங்கள் இருந்தது குறித்தும், கண் மற்றும் நாக்கு பிதுங்கி இருந்தது குறித்தும் அறிக்கையில் முழுமையான விளக்கம் இல்லை. எனவே, இது தொடர்பாக மே16 ம் தேதி முழுமையான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை மே 16 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.