காஞ்சிபுரம், மே 15: தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சென்னையில் சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்ட 5,000 குடிநீர் கேன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் கேன்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டு நிலவிவருவதால், இவற்றை பயன்படுத்தி, சுகாதாரமற்ற முறையில் குடிநீர் கேன்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேன்கள் விநியோகிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அதன்படி, காலாவதியான மற்றும் சுகாதரமற்ற முறையில் விற்பனைக்காக வைத்திருந்த 5,000 குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தரமற்ற தண்ணீரை உற்பத்தி செய்த சில நிறுவனங்களுக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, 53 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், உரிமத்தை புதுப்பிக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் பணி நடந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, சென்னை கோயம்பேட்டில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆய்வில், 7 மினி வேன்களில் வந்த 680 தண்ணீர் கேன்களை ஆய்வு செய்ததில், அவைகளில் 180 காலவதியான மற்றும் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், 200 கேன்கள் போலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் என்பது தெரியவந்தது.  குடிநீர் தண்ணீரின் தேவை அதிகரித்துவரும் கோடைக்காலத்தில், இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் கேன்களை விநியோகித்துவரும் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.