சென்னை, மே 15:
செல்போன் திருட அழைத்த வாலிபரின் தலையில் கல்லைபோட்டுவிட்டு தப்பியோடிய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர் ஒரகடத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 20). இவர் மீது திருட்டு வழக்கு உட்பட 8 வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், செல்போன் திருடுவதற்கு தன்னுடன் வந்து தனக்கு உதவுமாறு அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் ஜீவா (வயது 18), கரண் (வயது 18), அஜய் (வயது 18) ஆகிய மூன்று பேரையும் ராஜசேகர் அழைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்தால் மூவரையும் கொலை செய்து விடுவதாகவும் ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.  இதனையடுத்து, நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ராஜசேகர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஜீவா, கரண், அஜய் ஆகிய மூவரும், தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் தலையில் கல்லை போட்டதுடன், கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயங்களுடன் அலறி துடித்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தப்பியோடிய மூவரையும் இரவோடு இரவாக தேடிப்பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, கிரிக்கெட் பேட் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.