புதுடெல்லி, மே 15: பிஜேபிக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் ஆட்சியமைப்பது யார் என்பது குறித்து முடிவு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்  23-ம் தேதி இந்த கூட்டம் புது டெல்லியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகளுக்கும் சோனியா தனித்தனியே கடிதம் எழுதியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் மே 19-ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி இரண்டிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறப்படுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல்தான் பிரதமர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலாவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், பல்வேறு மாநிலத் தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் இதனை ஏற்கவில்லை.  தேர்தல் முடிவுக்கு பிறகு முடிவு செய்யலாம் என்று அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்தார்கள்.  பிஜேபியும், காங்கிரசும் தனித்தனியாக வியூகங்களை வகுத்து வருகின்றன. மாநிலக் கட்சிகளின் கை ஓங்கி இருப்பதால் அவர்களின் ஆதரவை திரட்டி ஆட்சியமைக்க இரு அணிகளுமே தீவிரமாக உள்ளன.

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் 23-ம் தேதி அன்று ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் மாநிலக் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.

பிஜேபி, காங்கிரஸ் அல்லாத ஒரு மாற்று அரசை அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  அப்படி ஒரு மாற்று அரசு அமையும் போது தனக்கு துணை பிரதமர் பதவியை கேட்டுப் பெறுவதற்கும் அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. பிஜேபியை பொறுத்தவரை தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்புகிறது. அல்லது தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்த நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.