புதுடெல்லி, மே 15: சர்ச்சைக்குரிய வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் கமல்ஹாசன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து, அங்குள்ள பள்ளப்பட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசனின் கருத்துக்கு பிஜேபி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில், பிஜேபியைச் சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.