சென்னை, மே 15: தமிழ்நாடு, கேரளா, குஜராத் மாநிலங்கள் மற்றும் புதுவை லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களில் உள்ள, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு, சென்னையில் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் இன்று நடைபெற்றது.

நாடு முழுவதும், மக்களவை பொதுத் தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது, ஆறு கட்ட தேர்தல்கள் நடந்துள்ள நிலையில், ஏழாம் கட்ட தேர்தல், வரும், 19ல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் வரும் 17-ந் தேதி மாலை 6 மணியளவில் முடிவடையவுள்ளது. நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடுத்த வாரம் மே  23-ந் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்த தேர்தலில், முதல் முறையாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சின்னங்கள் அச்சான ஒப்புகை சீட்டு, அதே இயந்திரங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளோடு சேர்த்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட்டடின் ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்படவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த உள்ளது.

எனவே, ஓட்டு எண்ணிக்கையை, எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், அதற்கு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் தமிழ்நாடு, கேரளா, குஜராத் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இன்று சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த பயிற்சியை தலைமை தேர்தல் ஆணையத்தின், துணை தேர்தல் ஆணையர்கள், சந்தீப் சக்சேனா, உமேஷ் சின்ஹா , செலவின பார்வையாளர் பிரிவின் இயக்குனர் திலிப் ஷர்மா ஆகியோர், கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி, டிக்காராம் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முடிவடைந்தவுடன் அண்ணா பல்கலைகழகத்தில் அமைக்கப் பட்டுள்ள மாதிரி வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் அதிகாரிகள் பார்வையிடவுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தென் சென்னையில் மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.