சென்னை, மே 15: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது ஐயா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீர மாணிக்கம் சிவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்த அவரது புகார் மனுவில், அரவக் குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மதகலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இவர் மீது சட்டரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி இளைஞரணி துணைத் தலைவர் குமார் மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் விரும்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கமலின் பேச்சிற்கு எதிர்ப்பு வலுத்துள்ளதையடுத்து, சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில் 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய 5 போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.