மதுரை, மே 16: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மறுத்துள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்ஜாமீன் கோரி மனு இதற்கிடையே, அரவக்குறிச்சியில் சர்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் தலைவர் கமல்ஹாசன் மீதான வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே எனப் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கு நீதிபதி பி.புகழேந்தி, வழக்கை ரத்து செய்வது தொடர்பான மனுவை விடுமுறை கால அமர்வில் அவசரகால வழக்காக விசாரிக்க முடியாது. எனவே முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கலாம் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மாலை, கமல்ஹாசன் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.