சென்னை, மே 16: பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரியை அணுகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ தனது வாக்குச்சாவடியில் நடைபெற்ற வன்முறை காரணமாக தன்னால் வாக்களிக்க முடியவில்லை. எனவே, பொன்பரப்பி கிராமத்தில் மீண்டும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பான ஆவணங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரியை மனுதாரர் அணுக வேண்டும்.

மறு தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.