அயர்லாந்து, மே 16: அயர்லாந்துக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், வங்கதேச அணி நாளைய இறுதிப்போட்டியில் வெ.இண்டீஸை எதிர்கொள்கிறது.

அயர்லாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி மே 5-ம் தேதி தொடங்கி 7 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடராக நடந்துவருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த 6-வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து-வங்கதேசம் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்து முதலில் களம்கண்டது. பால் (130), கேப்டன் வில்லியம் (94) அதிரடி காண்பிக்க 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிக்கொடுத்து 292 ரன்கள் எடுத்தது.

பின்னர், பேட்டிங் செய்த வங்கதேச அணியில், வரிசையாக 3 வீரர்கள் அரைசதம் கடக்க, பின்னர் வந்த வீரர்களும் தங்கள் பங்கிற்கு ரன் சேர்க்க, 43 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து அந்த அணி சுலபமாக இலக்கை எட்டியது (294 ரன்கள்).

தனது அபார பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவிபுரிந்த வங்கதேச பவுலர் அபு ஜயத்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள கடைசி ஆட்டத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் 3 வெற்றிகளுடன் உள்ள வங்கதேசம் மற்றும் 2 வெற்றிகள் பெற்றுள்ள வெ.இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.