சென்னை, மே 16:  தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் நடக்கவிருக்கும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், ஆசிரியர்களாக வேலைப் பார்த்து வருவோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 30 -ம் தேதி தனி நீதிபதி உத்தரவிட்டார்.

தகுதித் தேர்வு அறிமுகப்படுத்திய கடந்த 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு தகுதித் தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட வில்லை. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்து கொள்ளமுடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

அதுவரை அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை ஜூன் 2 வது வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.