சென்னை, மே 16: ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரபல ’ராஜா ராணி’ சீரியலின் படப்பிடிப்பை சிங்கப்பூரில் மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஸ்டார் விஜய் டிவியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான ’ராஜா ராணி’ சீரியலின் படப்பிடிப்பை சிங்கப்பூரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலங்களில் மேற்கொள்வதற்கும், சிங்கப்பூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை சிங்கப்பூர் சுற்றுலா வாரியமும், விஜய் டிவி நிர்வாகமும் செய்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ’ராஜா ராணி’ சீரியலில் வரும் கதாபாத்திரங்கள் சிங்கப்பூரில் சுற்றுலா மேற்கொள்வது போலவும், சிங்கப்பூரில் உள்ள சீர்மிகு நகரங்களில் படப்பிடிப்பு மேற்கொண்டு சிங்கப்பூரின் சுற்றுலா வளத்தை உலகிற்கு எடுத்துக்காட்டவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரியலை கண்டுகளிக்கும் ரசிகர்கள் சிங்கப்பூரின் அழகை கண்டு மகிழ்ச்சி அடைவதற்கு இது உதவியாக இருக்கும். இதுகுறித்து சிங்கப்பூர் சுற்றுலா துறையின் உயர் அதிகாரி ஜி.பி. ஸ்ரீதர் கூறுகையில், ஸ்டார் விஜய் டிவியுடன் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

அவர்கள் மூலம் எழில் மிகு சிங்கப்பூரை சின்னத்திரையில் கொண்டு வருவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஸ்டார் விஜய் டிவி நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சிங்கப்பூருக்கு 2018-ம் ஆண்டில் 1.44 மில்லியன் இந்தியர்கள் சுற்றுலா மேற்கொண்டனர். அவர்கள் மூலம் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் மேம்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு இந்தியர்களின் வருகையை அதிகரிப்பதற்காக விஜய் டிவியில் வரும் ’ராஜா ராணி’ சீரியலை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை 6 எபிசோடுகள் படம்பிடிக்கப்பட்டன, என்று கூறினார்.