புதுடெல்லி, மே 16: கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரசாரத்தை இன்று இரவு 10 மணிக்கு மேல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.  கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பிஜேபி தலைவர் அமித்ஷா பேரணி மேற்கொண்டார். அப்போது பிஜேபி. திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

வங்கத்தில் முக்கிய தலைவரான வித்யாசாகர் சிலையை விஷமிகள் உடைத்ததை அடுத்து கலவரம் வெடித்தது. இதனையடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாளைக்கு முன்னதாகவே முடித்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரசாரத்தை இன்று இரவு 10 மணிக்கு மேல் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.  மேலும், தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிட்டதற்காக, முதன்மைச் செயலர் அட்ரி பட்டாச்சார்யா, சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் குமார் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவை பயன்படுத்தும் அளவுக்கு மேற்கு வங்கத்தில் சட்டம் – ஒழுங்குப் பிரச்னை ஏற்படவில்லை.

பிரசாரத்தை முன்கூட்டியே முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது சட்ட விரோதமானது; நெறியற்றது. உண்மையில், இந்த கட்டுப்பாடு, பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பரிசாகும்.

முற்றிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கொண்ட தேர்தல் ஆணையத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. மாநிலத்தில் இரு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நீக்கவில்லை; மோடியும், அமித் ஷாவும் அவர்களை நீக்கியுள்ளனர் என்றார் மம்தா பானர்ஜி.