சென்னை, மே 16: திருவல்லிக்கேணியில் உள்ள ஓடு வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டதை கண்டதும் வீட்டில் இருந்தவர் வெளியே ஓடிவந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

திருவல்லிக்கேணி சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் செந்தில் (வயது 38) என்பவருக்கு சொந்தமான 3 வீடுகள் உள்ளன. இந்த மூன்று வீடுகளிலும் ஆந்திராவை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிவந்துள்ளனர்.

இந்த நிலையில், 3-வது அமைந்துள்ள ஓடுவீட்டில் நேற்றிரவு 8.30 மணியளவில் மிகப்பெரிய சத்தத்துடன் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில், வீடு முழுவதும் தரைமட்டமானது. வீட்டின் மேற்கூரை, வீட்டினுள் உள்ள பொருட்கள் என அனைத்தும் அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைந்தது.

தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீவிபத்தை கட்டுப்படுத்தினர். இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், அந்த வீட்டில் ராஜீ என்பவர் தங்கியிருந்ததாகவும், சிலிண்டர் காலியானதையடுத்து, அருகில் உள்ள வீட்டிற்கு சென்று மாற்று சிலிண்டர் கொண்டுவந்து அவற்றை மாற்ற முயன்றபோது, திடீரென தீப்பொறிகள் எழுந்துள்ளது.

அதனை கண்ட அடுத்த கணத்திலேயே பயந்துபோய் ராஜீ, வீட்டை விட்டு தலைத்தெறிக்க வெளியில் ஓடிவந்துள்ளார். அந்தசமயம்தான், கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.