சிபிசிஐடிக்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு

சென்னை

சென்னை, மே 16: மார்ட்டின் உதவியாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்த விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி கல்லூரி காசாளர் பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே 3 ம் தேதி, கல்குட்டையில் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார். வருமான வரித்துறையினர் மீது குற்றம் சாட்டிய அவரது மகன் ரோஹன்குமார், வழக்கை சிபிசிஐடி- க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமாசாமி முன் மே 16 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.  விசாரணை முறையாக நடக்கிறது. வழக்கை சிபிசிஐடி- க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இச்சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், மறு பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடமே குடும்பத்தினர் அணுகலாம்.
பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.

மாஜிஸ்திரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால், மனுதாரர் மீண்டும் இந்த கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் .