சென்னை, மே 16: இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என புதுவை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டபின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பிய புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:  இடைத்தேர்தல் நடைபெறும் ஒட்டப்பிடாராம் தொகுதியில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும்.

ஒட்டப்பிடாராம் இடைத்தேர்தலுக்கு காரணமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பிஜேபி மீதுள்ள வெறுப்பினாலும், ஆட்சியாளர்கள் மீதுள்ள வெறுப்பினாலும், இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் நிச்சயமாக வெற்றிபெறுவார். மோடி எதிர்ப்பு அலை நாடெங்கும் பரவிக்கிடப்பதால், இந்த முறை மோடி பிரதமராக வரமுடியாது.

கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும், ராகுல் பிரதமராவார். ரஜினி அரசியலுக்கு வருவது அவரது சொந்தவிருப்பம். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
இந்தியா மதசார்பற்ற நாடு, அனைவரும் ஒற்றுமையுடன் இருந்துவருகிறோம்.

இதனை சீர்குலைக்க யார் முயன்றாலும், அது தவறு. இடைத்தேர்தல் முடிவுக்குபின் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வருவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.