சென்னை, மே 16: கொளத்தூரில் ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் கோவையில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

கொளத்தூரை சேர்ந்தவர் முகமது ஜாகீர் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவரை, ராமகிருஷ்ணன், துரைராஜ் என்ற 2 பேர் தொடர்பு கொண்டு செம்பரம்பாக்கத்தில் இடம் வாங்கி தர சொல்லி அணுகியுள்ளனர்.

அதற்காக, அட்வான்ஸ் பணமும் அவர்கள் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வெகு நாள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல், இடத்தையும் முடித்து கொடுக்காமல் இருந்துள்ளார், முகமது.

இதனால், முகமது, ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகிய மூவரிடையேயும் பிரச்சனை எழுந்துள்ளது.
ராமகிருஷ்ணன், துரைராஜிடம் சமாதானம் பேசுவதற்காக, ஜான் இளங்கோ என்பவரை முகமது அழைத்துவந்துள்ளார்.

ஆனால், சமாதானம் பேசுவதற்கு மாற்றாக, ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோருடன் ஜான் இளங்கோவும் சேர்ந்து கொண்டு முகமதுவை தாக்கி கடத்திசென்றுவிட்டு,அவரது மனைவியிடம் ரூ.1 கோடி வாங்கிக் கொண்டுள்ளனர்.

பின்னர், அண்ணாசதுக்கம் அருகே நடுத்தெருவில் முகமதுவை இறக்கிவிட்டு, மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான ஜான் இளங்கோ கோவையில் பதுங்கி யிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு சென்ற போலீசார் நேற்றிரவு ஜான் இளங்கோவை கைது செய்து இன்று காலை சென்னைக்கு அழைத்துவந்தனர்.

இதனையடுத்து, ஜான் இளங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, தப்பியோடிய மற்ற இருவரையும் பிடிக்க தீவிரம் காட்டிவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.