சென்னை, மே 17: அரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் இருதயராஜ் (வயது 50). இவர், ஓய்வு பெற்ற வங்கி அலுவலர். இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்குமுன்பு 25 சவரன் நகை திருட்டு போனது.

இது குறித்து இருதயராஜ் அளித்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், இருதயராஜ் வீட்டில் அவர் கைவரிசை காட்டிச்சென்றது இவர்தான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 சவரன் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
டிபி சத்திரத்தை சேர்ந்த ரகு என்கிற ரகுவரன் (வயது 21) என்பது விசாரணையில் தெரியவந்தது.