மதுரை, மே 17: தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு உரிய தீர்வு காணுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண தேவையான நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய லாரிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
கேள்வி: குடிநீர் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது.
பதில்: பருவமழை சரியாக பொழியாத காரணத்தினாலே கடுமையான வறட்சியின் காரணமாக இந்த குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதைப் போக்க, ஏற்கனவே தேர்தலுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியிருக்கின்றேன். எந்தெந்த பகுதிகளில் வறட்சியால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றதோ, அந்தப் பகுதிகளுக்கெல்லாம் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலையிட்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டுமென்ற உத்தரவை வழங்கி அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியையும் முன்கூட்டியே அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கேள்வி: அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா குற்றம் சாட்டியிருக்கின்றாரே?
பதில்: அது தவறான குற்றச்சாட்டு.
கேள்வி: ஸ்டாலின் மற்றும் தினகரன் எல்லோருடைய கடுமையான தேர்தல் பரப்புரையை கடந்து, வருகிற 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது,…
பதில்: என்னுடைய பரப்புரை, துணை முதலமைச்சரின் பரப்புரை, எங்களுடைய கூட்டணி கட்சித் தலைவர்களின் பரப்புரைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: தேனியில் ரவீந்திரநாத் எம்.பி. என்று போட்டு, கல்வெட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?
பதில்: என்னுடைய கவனத்திற்கு இதுவரை வரவில்லை.
கேள்வி: மத உணர்வுகளை தூண்டக்கூடிய விதமாக பேச்சுக்கள் இருப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய பரப்புரை என்பதால் தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இவைகளெல்லாம் வருகின்றது. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் பேசினால் இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழாது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.
இன்றைய தினம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாதுரை சிபிஐ கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார், அவருக்கு என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்,
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.