சென்னை, மே 17: புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு காலி பீர் பாட்டில்களை எடுத்துச்சென்ற சரக்கு லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இருந்து காலிபீர் பாட்டில்களை சென்னை அரணவாய் குப்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் தர்மராஜ் (வயது 46) என்பவர் எடுத்துச் சென்றார்.

லாரியானது திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை சர்வீஸ் சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது லாரியின் ஆக்சில் உடைந்ததாகத் தெரிகிறது.
இதனால் நிலை தடுமாறிய லாரி சாலையோர தடுப்புக் கட்டையின் மீது ஏரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.