சென்னை, மே 17: மலேசியாவில் நடைபெற்ற 16-வது சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தவர்களுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,  மலேசிய நாட்டில் உள்ள ஈப்போ நகரத்தில் 16- வது சர்வதேச கராத்தே போட்டிகள் நடைபெற்றது. சிங்கப்பூர், ஜெர்மனி, உஸ்பெகிஸ்தான், கனடா, நேபால், மலெசியா என பல நாடுகள் பங்கு பெற்ற இப்போட்டியில் இந்தியா சார்பாக மாஸ்டர் கியோஷி ஜெ.பி.சிவபாலன் அவர்கள் தமது மாணவர்களுடன் போட்டியில் பங்கேற்றார்.

சீனியர் மாஸ்டர்ஸ் ஆடவர் பிரிவில் போட்டியிட்ட மாஸ்டர் கியோஷி ஜெ.பி.சிவபாலன் தங்கப் பதக்கம் வென்றார். சீனியர் கருப்புப் பட்டை மகளிர் பிரிவில் போட்டியிட்ட *சென்சாய் வினோதா சிவபாலன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.மாணவர்களுக்கான பிரிவில் ஜித்தேஷ் (11வயது) கத்தா போட்டியில் தங்கப் பதக்கத்தையும் குமிதே எனும் சண்டையிடும் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

அனிருத் (12வயது) கத்தா போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் குமிதே எனும் சண்டையிடும் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் குலா மற்றும் இப்போட்டியின் ஏற்பாட்டாளர் மாஸ்டர் அனந்தன் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வெற்றி பெற்று இந்தியா திரும்பிய வீரர்களுக்கு விமான நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.