சென்னை, மே 17: மதுரவாயலில் சாக்லெட் கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர், கோயம்பேடு மார்க்கெட்டில் சாக்லெட் கடை வைத்துள்ளார். கடந்த 15-ம் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு சிவகாசி அருகே திருத்தங்கலில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்க்கும்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 13 சவரன் நகை, விலையுயர்ந்த 2 கேமராக்கள், 2 டிவிக்கள், வெள்ளி பூஜை பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மாயமானதை அடுத்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்த அவர் அளித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இதுவரை 4 தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை பதிவையும் கைப்பற்றிய போலீசார், கொள்ளையனை தீவிரமாக தேடிவருகின்றனர்.