விழுப்புரம், மே 18: திண்டிவனத்தில் ஏசி இயந்திரம் வெடித்து தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  மூத்த மகனே அவர்களை கொலை செய்துவிட்டு தடயத்தை மறைக்க ஏசி இயந்திரத்தை வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி(வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளரான இவர், தனது மனைவி கலைச்செல்வி(52), 2-வது மகன் கவுதம்(27) ஆகியோருடன் கடந்த 15-ந் தேதி அதிகாலையில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஏ.சி. எந்திரம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேரும் பலியாகி இருக்கலாம் என்று ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ராஜியின் நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கலைச்செல்வியின் தம்பியான கேணிப்பட்டை சேர்ந்த ஜெயங்சகர்(43) போலீசாரிடம் கூறுகையில், ராஜி மற்றும் கவுதமின் உடலில் வெட்டு காயங்கள் இருந்ததை தான் பார்த்ததாகவும், அவர்களை வெட்டி கொலை செய்து விட்டு, அதனை மறைப்பதற்காக அறையின் உள்ளேயும், வெளியேயும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்றும், இந்த சம்பவத்தில் ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனன் மற்றும் சில உறவினர்கள் மீது தனக்கு சந்தேகம் உள்ளது என்றும் கூறி இருந்தார்.

போலீசார் விசாரணை இதன் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் மதியம் கோவர்த்தனனை, தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தனி அறையில் வைத்து அவரிடம் நேற்று 2-வது நாளாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் கோவர்த்தனனின் மனைவி தீபகாயத்திரி நேற்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள தனி அறையில் அவரிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் மேலும் சில தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குறிப்பிட்ட நேரத்தில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில்தான் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கூலிப்படையை ஏவி இந்த கொலை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. கூலிப்படையினர் அவர்களை வெட்டி சாய்த்திருக்கின்றனர். பின்னர் அவர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி அந்த அறையில் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயத்துடன் தப்ப முயன்ற தம்பியை மீண்டும் வெட்டி தீயில் தள்ளியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. சொத்துக்காக சொந்த தாய்-தந்தை மற்றும் தம்பியை கொன்று அண்ணன் நாடகமாடியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.