சின்னத்திரையில் இருந்து மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். இந்த 2 படங்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன் பிரியாவிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனையடுத்து புதிய படங்களில் பிரியா பவானி சங்கர் பிசியாக நடிக்க தொடங்கினார். எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து அவர் நடித்த மான்ஸ்டர் படம் நேற்று வெளியானது. இந்த படத்தை ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.

காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி உள்ள மான்ஸ்டர் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை பிரியா பவானி ஷங்கர் கொண்டாடி வருகிறார். இது குறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில், இந்த படத்தில் நகைக்கடையில் பணியாற்றும் பெண்ணாக நடித்துள்ளேன்.

இயக்குனர் என்னிடம் கதையை சொன்னவுடன் எனது கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது.
அதே போல் உடன் நடித்த எஸ்.ஜே.சூர்யா திறமையான இயக்குனர் மட்டுமல்ல. நல்ல கோஸ்டராகும் கூட. இயக்குனர் கதையை கூறியபடியே சுவாரஸ்யம் குறையாமல் திரையில் தந்துள்ளார்.

வெளியிட்ட இடங்களில் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது, உற்சாகத்தை தந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் படத்தில் நடித்துள்ளேன். அதே போல் ஜீவா மற்றும் அருள்நிதி படங்களில் நாயகியாக நடிக்கிறேன்.

அதோடு துல்கர் சல்மான் நடிக்கும் வான் படத்திலும் நடித்து வருகிறேன். இந்த படங்களில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்றார்.