கர்கோன் (ம.பி.). மே 18:  மக்களவைத் தேர்தலில் ஆளும் பிஜேபி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் 7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான கடைசிக்கட்ட பிரசாரம் நேற்று நடைபெற்றது.

இதில், பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச மாநிலம், கர்கோனில் நடைபெற்ற பிஜேபி பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வாக்காளர்களாகிய நீங்கள் (பொதுமக்கள்), நாளை வாக்களிக்கச் செல்லும்போது புதிய வரலாறை எழுதப்போகிறீர்கள். பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, பெரும்பான்மை பலமிக்க அரசை இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். அதற்காக, உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கில் காஷ்மீர் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை, மேற்கில் கட்ச் (குஜராத்) முதல் கிழக்கில் காமரூப் (அஸ்ஸாம்) வரை, ஒட்டுமொத்த தேசமும் மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று கூறுகிறது. மக்களவைத் தேர்தலையொட்டி, எனது முதல் பிரசாரத்தை உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் இருந்து தொடங்கினேன்.

இறுதிக்கட்ட பிரசாரத்தை கர்கோன் நகரில் நிறைவு செய்கிறேன். வரலாற்று ரீதியில் இவ்விரு நகரங்களுக்கும் இடையே மிக முக்கியமான ஓர் ஒற்றுமை உள்ளது. 1857-இல் இவ்விரு நகரங்களிலும் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. மீரட் நகரில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக இந்திய வீரர்கள் போராடினர்.

கர்கோன் நகரில் சுதந்திரப் போராட்ட வீரர் பீமா நாயக் தலைமையில் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் பீமா நாயக் வீரமரணம் அடைந்தார். முந்தைய தேர்தல்களைக் காட்டிலும், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல் முற்றிலும் வேறுபட்டது.

காரணம், இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் அனைவரும் கட்சி அடிப்படையில் வாக்களிக்காமல், இந்த தேசத்துக்காக வாக்களிக்கிறார்கள். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக அவர்கள் வாக்களிக்கிறார்கள்.
உணவு கிடைக்காதவர்கள்தான் ராணுவத்தில் சேர்கிறார்கள் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியிருந்தார்.

ராணுவ வீரர்களை அவமதிக்கும் அவரது பேச்சுக்கு கர்நாடகத்தில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவிக்கவில்லை. பெண்களுக்கு தண்ணீரும், சுகாதாரமும் முக்கியம் என்று ஜவாஹர்லால் நேருவிடம் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான ராம் மனோகர் லோகியா கூறினார்.

அவருடைய ஒரு கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன். நாடு முழுவதும் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்து, பெண்களுக்கு கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துவேன்.

பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது: நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதன் மூலம் மகாத்மா காந்தியை அவமதித்த பிரக்யா சிங் தாக்குரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். அவர் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது.

பண்பாடு மிக்க நமது சமூகத்தில் இதுபோன்ற பேச்சுக்கு அனுமதி கிடையாது. அதுபோன்ற சிந்தனையைக் கூட அனுமதிக்க முடியாது. தாம் தெரிவித்த கருத்துக்காக, பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டாலும், என் மனதளவில் அவரை மன்னிக்க மாட்டேன் என்றார் பிரதமர் மோடி.