புதுடெல்லி, மே 18: பிரதமர் மோடி, பிஜேபி தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதி மீறல் புகாரில் தமது கருத்தை தேர்தல் ஆணையர் ஏற்காததால் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி தூக்கி உள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று பேசினார்.

மோடியின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பிஜேபி தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டார்.

இது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம், மேற்கண்ட சம்பவங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறவில்லை என்ற முடிவு எடுத்தது. இதையும் சேர்த்து, மோடிக்கு எதிரான 8 புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் புகாரில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி எனது கருத்தை அரோரா ஏற்காததுடன், அதனை பதிவும் செய்யவில்லை எனக்கூறி ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாக வெளியான தகவல் வருமாறு:- பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். பிரதமர் மோடி அமித்ஷாவுக்கு எதிரான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துக்களை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏற்றுக்கொள்ளவில்லை.

சிறுபான்மைத் தீர்மானங்களை பதிவு செய்வதன் அடிப்படையில் ஆணைக்குழு சட்டபூர்வமான செயல்பாட்டை மீளமைப்பதை இலக்காகக் கொண்ட மற்ற நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதை நான் கருத்தில் கொள்ளலாம்.

பதிவுகளில் வெளிப்படைத்தன்மை தேவை மற்றும் சிறுபான்மை பார்வை உட்பட எல்லா முடிவுகளையும் வெளிப்படுத்தியதன் அடிப்படையில் என் பல்வேறு குறிப்புகளை கவனிக்காமல் போய்விட்டன.,
எனது கருத்துக்களை ஏற்று கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை.

கமிஷனின் விவாதங்களில் எனது பங்கு அர்த்தமற்றதாகி விட்டது, ஏனெனில் எனது சிறுபான்மை முடிவுகள் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை. புகார்களைப் பற்றி கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமல் என்னை விலகி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சமயத்தில் வெடித்து கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,