சென்னை, மே.19: தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை முதல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்ததை காணமுடிந்தது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. எஞ்சியுள்ள அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலுக்காக 4 தொகுதிகளிலும் 656 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துணை ராணுவப்படையினர் 212 பேர் உட்பட 3,423 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகரை அடுத்து தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பட்டி, நத்தமேடு உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகளிலும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதே போன்று இதேபோன்று தேனியில் இரண்டு, ஈரோடு, திருவள்ளூர், கடலூரில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் காவல் துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதே போன்று தேனியில் இரண்டு, ஈரோடு, திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப்பதிவு நடக்கும் 13 வாக்குச்சாவடிகள் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ளன. 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சுமார் 15 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 11 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் 30,02, அரவக்குறிச்சியில் 34,89, சூலூரில் 31,85, ஒட்டப்பிடாரத்தில் 30,28 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் இருந்து வாக்களித்த வந்த நிலையில் மதியம் 1 மணி வரை இந்த 4 தொகுதிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணி வரை வாக்குகளை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், 6 மணிக்கு முன்பாக வாக்குச் சாவடி மையங்களுக்கு வருகை தரும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்னரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்கும் போது 80 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று பதிவாகவும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடதக்கது.