கரூர் :மே 19: அரவக்குறிச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- ‘ஆர்.கே.,நகரில் இதுபோல அ.ம.மு.க.,வில் இருந்தபோது டோக்கன் கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது அரவக்குறிச்சியிலும், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் தருகின்றனர்.

மாலை 3 மணிக்கு டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம் தருவதாகவும் பல இடங்களில் பலமாதிரி சொல்கின்றனர். மேலும், புகளூர் நால்ரோடு, காந்திநகர் மற்றும் முல்லை நகர் உள்ளிட்ட இடங்களில், வாக்காளர்களை இதுவரை ஓட்டுப்போட விடாமல் தடுத்து வைத்துள்ளனர்.

தோல்வி பயத்தால், வேலாயுதம்பாளையம் மற்றும் தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்காளர்களை மிரட்டி தடுத்து வைத்து, மாலையில் ஓட்டுப்போடுங்கள் ; 2 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறுகின்றனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவேண்டும்,’’ என்றார்.