புதுடெல்லி, மே 20: மக்களவைக்கு இறுதிக்கட்டமாக 59 தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலின்போது மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

மக்களவையில் உள்ள 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், உத்தரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (9), பஞ்சாப் (13), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), ஹிமாசலப் பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), சண்டீகர் (1) ஆகிய 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட்ட வாராணசி மக்களவைத் தொகுதியும் அடங்கும்.

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, தலைநகர் கொல்கத்தா, அதன் புறநகர் பகுதிகளில் மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று கொண்டிருந்த தங்களை மத்திய பாதுகாப்புப் படையினர் மிரட்டியதாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டைமண்ட் ஹார்பர் தொகுதி பிஜேபி வேட்பாளர் நிலஞ்சன் ராய், ஜாதவ்பூர் தொகுதி பிஜேபி வேட்பாளர் அனுபம் ஹஜ்ரா ஆகியோரின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வடக்கு கொல்கத்தா தொகுதிக்குள்பட்ட கிரிஷ் பூங்கா பகுதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், லூதியானா, மொகா உள்ளிட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்பட்டது.

பதின்டா, குருதாஸ்பூர் ஆகிய நகரங்களில் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம்-பிஜேபி தொண்டர்கள் இடையே மோதல் மூண்டது. தல்வாண்டி சபோ பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டதாக அகாலிதளம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 66.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், இது குறைவாகும்.

7 கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அன்றைய பிற்பகலிலேயே, தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ தெரிந்துவிடும்.