சென்னை, மே 20: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது ஆசிட் வீசிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரில் உள்ள அடுக்கு குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் கண்ணியப்பன் (வயது 33). வெள்ளி பட்டறையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சனி. அவரது சகோதரர் பாஸ்கர். இவரும் அதே வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வருகிறார். அந்த குடியிருப்பின் 2-வது மாடியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் 8 பேரும் அமர்ந்து மது அருந்துவிட்டு சிரித்து பேசி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கு வந்த கண்ணியப்பன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் ஏன்? சத்தம் போட்டு பேசி சிரித்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று கேட்டதாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்கும், கண்ணியப்பன் மற்றும் பாஸ்கர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. 8 பேரும் சேர்ந்து கண்ணியப்பன் மற்றும் பாஸ்கரை கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் பாஸ்கருக்கு தலையிலும், தடுக்க சென்ற ரஞ்சனிக்கு வலது கையிலும் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு சென்ற கண்ணியப்பன் அங்கு வைத்திருந்த வெள்ளி பட்டறையில் பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்து 8 பேர் மேலும் வீசியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அழகுமுத்து (வயது 38). கருப்பசாமி (வயது 32). வாஞ்சிநாதன் (வயது 18). வேல்முருகன் (வயது 23). (வீரமணி (வயது 23). அசோக் (வயது 19) மற்றொரு வேல்முருகன் (வயது 25) ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்ணியப்பனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.