மதுரை, மே 20: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயை குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறினார்.
இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் பேசிய அவர், காந்தியின் கொலைக்கு நீதி கேட்க வந்திருப்பதாக கூறி இதனை தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதுபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தான் கூறியது சரியானது என்றும், வரலாற்று உண்மையைத் தான் பேசினேன் என்றும் கமல்ஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

இது இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஐகோர்ட் மதுரை கிளை, கமல்ஹாசனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.