புதுடெல்லி, மே 20: நேற்று வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று செய்தி வெளியானது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதனால் வரும் 23-ந் தேதி காங்கிரஸ் தலைமையில் நடைபெறுவதாக இருந்த கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியாவை இன்று சந்தித்து பேசுவதாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி திடீரென அத்திட்டத்தை கைவிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவின் 17-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நடந்து முடிந்துள்ளது. 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இதற்கிடையே, ஊடகங்கள் நேற்று இறுதி கட்டத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வெளியிட்டுள்ள வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பிஜேபி கூட்டணிக்கு சாதகமாக வெளி வந்துள்ளன.
பிஜேபி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி அதன் தோழமை கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கருதியதால் ஆட்சி அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டி எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிற 23-ந் தேதி கூட்டணி கட்சிகளுக்கு டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தது. கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சோனியா காந்தி கடிதம் எழுதினார்.
பிரதமர் பதவி யாருக்கு என்பதை பேசி முடிவு செய்யலாம் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் கருத்துக் கணிப்பு முடிவுகள் பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வரும் வரை பொறுத்திருப்பது என்று பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மாயாவதியின் இந்த முடிவு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதே போல மற்ற எதிர்க்கட்சிகளும் தற்போதைக்கு சோனியாவை சந்திப்பதை தவிர்க்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து யாருக்கு வெற்றி என்பதை அறிவதற்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்துவது சரியாக இருக்காது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கருதுவதாக தெரிகிறது.
ஆகவே வருகிற 23-ந் தேதி சோனியா காந்தி கூட்டியுள்ள கூட்டணி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்து செய்யப்படலாம் அல்லது மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று தலைநகர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.