வாராங்கல், மே 21: இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி- பேஷன் டிசைனர் பிரீத்திராஜின் திருமணம் தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்தவர், இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி. இவர், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பு அளித்தார். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.

ஆந்திரா ரஞ்சி கிரிக்கெட் அணியில் சேர்ந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய விஹாரி, அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தனது நீண்ட நாள் தோழியான பிரீத்தி ராஜ் என்பவரை விஹாரி திருமணம் செய்துக்கொண்டார். தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனமாகோண்டாவைச் சேர்ந்த பிரீத்தி ராஜ், பேஷன் டிசைனராக உள்ளார்.

இவர்களின் திருமணம் நேற்றுமுன்தினம் வாராங்கல்லில் பிரமாண்டமாக நடந்தது. இதில், இரு தரப்பு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.