சென்னை, மே 22: இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போரூரில் நடந்தேறியுள்ளது. சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், தாய்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு¢வருகிறது.

சென்னை போரூரை சேர்ந்தவர் சிபிராஜ் (வயது 35). இவரது மனைவி சைஜா (வயது 29). இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4), ஆதிகேஷ் (வயது 2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சிபிராஜ் கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தார், அதேசமயம், பைனான்ஸ் தொழிலும் மேற்கொண்டுவந்ததாக தெரிகிறது.

இதனிடையே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் சிபிராஜ் இறந்துவிட்டார்.= இந்த நிலையில், சிபிராஜின் வீட்டிற்கு அவரது நண்பர் கேரளாவை சேர்ந்த ஜினைத் என்பவர் இன்று காலை வந்துள்ளார்.  கதவை தட்டிய நிலையில், கதவு உள்தாழ்ப்பாள் இடாமல் இருந்ததால், உள்ளே சென்றுள்ளார். அங்கு, சைஜா மற்றும் அவரின் குழந்தைகள் பேச்சு மூச்சின்றி மயங்கியநிலையில் இருந்துள்ளனர்.

இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த ஜினைத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மூவரையும் மீட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சைஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு சைஜாவும் விஷம் அருந்தியது தெரியவந்துள்ளது. அதேசமயம், குழந்தைகளின் கழுத்தில் காயம் இருப்பதால், கழுத்து நெறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனரா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கடன் தொல்லையா? அல்லது கணவன் இறந்த துக்கம் தாளாமல் சைஜா தற்கொலைக்கு முயன்றாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.