புதுடெல்லி,மே.22: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் பொதுத் தேர்தலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 45 மையங்களில் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையொட்டி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழகத்தில் வேலுர் தொகுதி தவிர 38 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 22 சட்டமன்ற தொகுதிகளில் மினி சட்டசபை தேர்தல் போல இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் 45 மையங்களில் எண்ணப்படுகின்றன.

இந்த மையங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் சட்டம் ஒழுங்கு போலீசார் வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடை பெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் 3 மக்களவை தொகுதி மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 3 மையங்களில் நடைபெறுகிறது.

வடசென்னை மக்களவைத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், மத்திய சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாகக்குகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இந்த மூன்று மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாக்கும் எண்ணும் பணியில் 306 பேர் ஈடுபடஉள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அதிகாரிகள் முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 8 மணிக்கு தபால் மற்றும் ஆன்லைன் மூலம் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 8,30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.
ஒவ்வொரு வேட்பாளருக்கும் 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கூராக உள்ள பேனா போன்றவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை, பேப்பர், பென்சில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் அனுமதிக்கப்படும்.

முகவர்களுக்கு தேவையான அனைத்தும் எண்ணிக்கை மையத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் கிடைக்கும், இதனைத் தாண்டி வெளியில் சென்றவர்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் தேர்தல் பார்வையாளர்கள் உட்பட அனுமதிக்கப்பட்ட சில அதிகாரிகள் மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு நாளை 10 மணி முதல் இரவு 12 மணிவரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.